ஈழத்தில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு சமர்ப்பணமாக வெளியாகியுள்ளது, ‘எங்கே?’ காணொளிப்பாடல்.

பேரினவாதத்தின் போர் அனைத்தையும் பறிகொண்டு விட்டபோதும், தொடர்ந்தும் பழிவாங்கப்படுகிறது நம் தமிழ் இனம். இப்போது அவர்களின் மிக முக்கிய கோரிக்கை, காணாமல் போன தம் உறவுகளை மீட்டுத் தாருங்கள் என்பது தான். குறைந்தபட்சம், அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா என்பதையெனும் அறியத்தாருங்கள் என கோருகிறார்கள்.

கடந்து விட்ட இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ கதவுகளை தட்டியாகிவிட்டது. பலர், கால்களிலும் விழுந்தாகிவிட்டது. உண்ணும் உணவைத் துறந்து, வீதியில் பதாகைகளை ஏந்தி நின்று, புரண்டு புரண்டு அழுது போராடியுமாகிவிட்டது. ஆனால், எந்த பலனும் இல்லை. அப்பாவைத் தேடும் பிஞ்சுகள் இன்று வரை தேடிக்கொண்டே தான் இருக்கின்றன.

இந்த வலியை புலப்படுத்தும் ஓர் கலைப்படைப்பாகவே ‘எங்கே?’ வெளியாகியுள்ளது.

பாடலின் ஆரம்பத்தில் இடம்பெறும் சிறுவனின் ஏக்கம் தோய்ந்த கண்கள், தந்தைகளை தொலைத்துவிட்டு எதிர்காலத்தை கேள்விக்குறியுடன் எதிர்நோக்கியிருக்கும் குழந்தைகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

Vidushaanனின் குரல் மற்றும் ரப், Fathima Zimra ,Sukirtharshan Djk ,Manovathan Lathu ஆகியோரின் வரிகள் பாடலுக்கு மிகப்பெரிய பலம். ZeroBeatsஇன் இசை பாராட்டத்தக்கது.

மிக நேர்த்தியான படைப்பு. இந்த காணொளிப்பாடலின் வாயிலாக கலைஞர்கள் முன்வைக்கும் கோரிக்கை வரவேற்கத்தக்கது.

‘எங்கே?’ குழுவினருக்கு தமிழிதழின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.